மாலைத்தீவு நாடாளுமன்றத்தை அந்நாட்டு இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்களை விடுவிக்குமாறும் அரசுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே ஜனாதிபதி அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான மாலைத்தீவு முன்னேற்றக் கட்சியிலிருந்து விலகிய 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அந்த 12 பேருக்கும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டிய நிலை நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ளது.
12 பேருக்கும் பதவி வழங்கப்பட்டால், அவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலம் பெற முடியும் எனவும், ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நாடாளுமன்றத்தை காலவரையின்றி முடக்குவதாக மாலைத்தீவு அரசு அறிவித்தது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க உத்தரவிட்டும், விடுவிக்காத அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் நாடாளுமன்றத்தை இராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
#rishma…