தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூனின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அரசு விவகாரத்தில் தலையிட்டு ஆதாயம் பெற்ற குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் ஜனாதிபதியாக இருந்த பார்க் கியூனின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக முக்கிய இரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அதையடுத்து, கடந்த வருடம் மார்ச் மாதம் சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். மேலும், பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு மார்ச் 10ம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் லிபரல் கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.
ஊழல் குற்றச்சாட்டால் பதவியை இழந்த தென்கொரியா முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் மீதான விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பார்க் விசாரணையின் போது கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியால் மாவட்ட நீதிமன்றத்தில் சோய் சூன் சில் மீது குற்ற விசாரணை நடந்துவந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று(13) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும், 16.6 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் சோய்க்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.