உலக அழகிகளான ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் சினிமாவில் நுழைந்து தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து கலக்கிக்கொண்டிருக்கின்றனர். இதனால் பல ஹீரோயின்களின் வாய்ப்பு பறிபோனதுடன் சினிமாவிலிருந்து காணாமலும் போயினர். போட்டியை எதிர்கொண்டு ஒரு சில நடிகைகளே தாக்குபிடிக்க முடிந்தது.
தற்போது உலக அழகியாக தேர்வான அதே வேகத்தில் திரையுலகில் அதிரடியாக நுழைந்திருக்கிறார் மனுஷி. இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமிர்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
வழக்கமாக உலக சுற்றுலா அல்லது நற்பணி நிகழ்ச்சிகளில் உலக அழகிகள் கலந்துகொள்வது வழக்கம். அதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டாலும் பெரும்பகுதி கவனத்தை சினிமாவின் மீது திருப்பியிருக்கிறார் மனுஷி. பல ஹீரோயின்கள் கவர்ச்சி உடைகளில் தோன்றி தினமும் அதிரடி படங்களை இணைய தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த பாணியை மனுஷியும் கையிலெடுத்திருக்கிறார்.
டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சியான படங்களை பகிர்ந்திருப்பதுடன் ஆங்கில இதழ்களின் அட்டை படங்களுக்கு நடிகைகள் போஸ் தருவதுபோல் இவரும் ஆங்கில இதழின் அட்டை படத்துக்கு போஸ் தந்திருக்கிறார்.
நடிகையானது பற்றி மனுஷி சில்லர் கூறும்போது,‘ஆமிர்கானுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் உலகிலேயே அதிக சந்தோஷமான நபர் நானாகத்தான் இருப்பேன். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களும் நடிப்பதற்கான வாய்ப்பும் தருவார். இது எனது வாழ்க்கை பயணத்தில் மற்றொரு மைல்கல்’ என்றார். மனுஷியின் சினிமா பிரவேசம் சக ஹீரோயின்களை திகில் கொள்ள வைத்துள்ளது.