உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அடுத்த மாதம் வெளியிடப்படும்…

உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்களை கட்சிகளின் செயலாளர்கள் அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் எனவும், குறித்த பட்டியல் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, 50 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்களையும் உப தலைவர்களையும் அறிவிக்கலாம். இந்நடவடிக்கை அடுத்த மாதம் நான்காம் அல்லது ஐந்தாம் திகதி இடம்பெறுவது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மேலும் 364 உறுப்பினர்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தேர்தலில் 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இதில் 535 பேர் பெண்களாவர் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் கூறியுள்ளார்.