ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 1,500 சிறைக் கைதிகளை விடுவிக்கத் தீர்மானம்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று(24) 1,500 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள் மற்றும் 126 கிளை சிறைகள் உட்பட 135 சிறைகள் உள்ளன. இவற்றில் 19,000 ஆண் மற்றும் பெண் கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை, மரண தண்டனை, கடுங்காவல் தண்டனை மற்றும் சாதாரண சிறை தண்டனை பெற்றவர்கள். இவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கின்றனர்.

முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளில் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். இந்த முறை சில ஆண்டுகள் கைவிடப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் பலரின் வேண்டுகோளை ஏற்று ‘சட்டத்துக்கு உட்பட்டும் சிறை விதிகளுக்கு உட்பட்டும் மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 1500 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.