நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி…

நேபாளம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு இந்நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை(கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் மூன்று கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் கட்சிகள் அடங்கிய இடதுசாரி கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், பாராளுமன்ற மேல்சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. 6 மாகாணங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 59 இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றின. நேபாள காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், இதர கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி தலைவரான கே.பி. சர்மா ஒலி அந்நாட்டின் பிரதமராக கடந்த மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

புதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பிரதமராக பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

இதையடுத்து, நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி பெற்றார். பாராளுமன்ற கீழ்சபையில் அங்கம் வகிக்கும் 275 268 உறுப்பினர்களில் 268 இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 208 உறுப்பினர்கள் சர்மா ஒலியை ஆதரித்து வாக்களித்தனர்.

ஆட்சியை பறிகொடுத்த நேபாளம் காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சர்மா ஒலியை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

வாக்கெடுப்பு தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹாரா ஒத்திவைத்தார்.