கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4ஆம் திகதி 12 ஆம் திகதி மாலை 6 மணிவரை 280 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கண்டி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற இன கலவர தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வீடுகள், கடைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 445 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் மட்டும் 423 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதில் 19 மதஸ்லங்களும் உள்ளடங்குகின்றன. ஏனைய பிரதேசங்களில் சேதங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மொத்தமாக 280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கண்டியில் மாத்திரம் 178 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களுள் 95 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் பயன்படுத்திய அலுவலகங்களில் இருந்து, இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 கணனிகளும் (CPU) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.