எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களின் சருமத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக தொற்றிக் கொண்டு, வெள்ளைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சினைகளை உண்டாக்கும். ஒருவரது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதற்கு மரபணுக்கள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், உணவுகளில் அதிகளவு எண்ணெய் சேர்ப்பது போன்றவை காரணங்களாக இருக்கும்.
முட்டை:
முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்யுங்கள். முதுமைத் தோற்றத்தை அளிக்கும் சருமத்தை இறுகச் செய்வதற்கு, முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றினை 1 டீஸ்பூன் எடுத்து, 1 டீஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து, பஞ்சு பயன்படுத்தி, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். அல்லது, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளி:
எண்ணெய் பசை சருமத்தினருக்கு தக்காளி மிகச்சிறப்பான பொருள். இதில் உள்ள பண்புகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, சருமத்தை பளிச்சென்று மாற்றும். அதற்கு ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி, முகத்தில் நேரடியாக தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை வெட்டி, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளரிக்காய் சாற்றில் எலுமிச்சை சாற்றினை கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவலாம்.
கற்றாழை:
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், முகம் அழகாகவும், பிரச்சினைகளின்றியும், சுத்தமாக முகம் இருக்கும்.
தேங்காய் பால்:
தேங்காய் பாலை முகத்தில் தடவி சிறிது நேரம் நன்கு ஊற வைத்து, பின் முகத்தை நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
வேறு சில டிப்ஸ்…
* தினமும் ஒரு ஐஸ் கட்டியை ஒரு துணியில் போட்டு, முகத்தை துடைத்து எடுத்து வருவதாலும், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கலாம்.
* ஆரஞ்சு தோலை உலர வைத்து அரைத்து பொடி செய்து, அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவதன் மூலமும், அதிகப்படியான எண்ணெய் சுரப்பைத் தடுக்கலாம்.