அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை, தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கத்தை கருத்திற் கொண்டு, அதன் பின்னரே அது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னரே, தனிநபர் பிரேரணையைக் கையளிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும், அதில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதியை வழங்கியே ஆட்சிபீடமேறினார்கள். எனினும், எவரும் நிறைவேற்றவில்லை. எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் நாம், எதிர்ப்பையே வெளிப்படுத்தி வருந்துள்ளோம்.
இவ்வாறான நிலையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடனும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனும் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு, ஜே.வி.பியால் மாத்திரம் முடியாது. அதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்…” என்றார்.