2018, 2019 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் இராணுவ செலவினங்கள் குறைக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்று, அதிபர் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், 2018, 2019 ஆண்டுகளில் இராணுவ செலவினங்களை குறைப்பதற்கு உறுதி எடுத்துள்ளார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை கிரெம்ளின் மாளிகையில், சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இராணுவ செலவினங்களை 2018, 2019 ஆண்டுகளில் குறைப்போம். அதேநேரத்தில் இது நாட்டின் தற்காப்பு தகுதி திறனை குறைத்துவிடாது எனவும் கூறியுள்ளார்.
மேலும், “அரசாங்கம் உள்நாட்டு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தும். குறிப்பாக பொருளாதார வளர்ச்சி, புதுமை, ஆரோக்கியம், கல்வி, அறிவியல், உள்கட்டமைப்பு, மக்களின் நலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இராணுவ பட்ஜெட்டுகளை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிற வேளையில், இராணுவ செலவினங்களை குறைத்துக்கொள்ளப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.