வெள்ளையாக வெள்ளரிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

வெயில் காலத்தில் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் கருமையடைவதையும் தடுக்கலாம். எண்ணெய் பசை சருமத்தினர் வெள்ளரிக்காயைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை குறையும்.

மேலும் வெள்ளரிக்காயில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுத்து, இளமையைத் தக்க வைக்கும். முக்கியமாக வெள்ளரிக்காய் அனைத்து வகையினருக்கும் ஏற்றது.

வெள்ளரிக்காய், இளநீர் மற்றும் பால் பேக்:
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 2 டேபிள் ஸ்பூன் இளநீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவ வேண்டும். பின் 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி பேக்:
வெள்ளரிக்காய் சாறு மற்றும் தக்காளி சாற்றினை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் முல்தானி மெட்டி பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் மஞ்சள் பேக்:
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை நீரால் கழுவ வேண்டும். இச்செயலால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தயிர் பேக்:
வெள்ளரிக்காய் கூழ் மற்றும் தயிரை சரிசம அளவில் ஒரு பௌலில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கும் டோனர் போன்று சரும நிறத்தை உடனடியாக மேம்படுத்திக் காட்டும். மேலும் இந்த பேக் முகத்தை பிரகாசமாக காட்டும்.