சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பிலான அம்சங்களுக்கான ஆர்வத்தை இன்னும் இலங்கை வெளிப்படுத்தவில்லை என்பதில் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மனித உரிமைகளுக்கான உதவி உயர்ஸ்தானிகர் கேட் கில்மோர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான மீளாய்வு அமர்வு நேற்று(21) ஜெனீவாவில் இடம்பெற்ற போதே அவர் மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் பேரவையில் கருத்துத் தெரிவிக்கையில்;
“கடும் குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியுடன் நீதிப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதிலும் இலங்கை தோல்வி கண்டுள்ளது. இலங்கையின் இந்த காலதாமதம் குறித்து வருந்துகிறேன். இந்தநிலையில் இலங்கை ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளை 2019 மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை சட்டம் நிறைவேற்றப்பட்ட 20 மாதங்களின் பின்னரே காணாமல் போனோர் தொடர்பான அலுவலத்துக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதை விமர்சிக்கிறேன். வடக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்கான நட்டஈடுகளை வழங்குவதில் உரிய பொறிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.
அத்துடன் அண்மையில் கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் தமது சபை அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதனைத் தவிர சித்திரவதைகள், மனித உரிமை காப்பாளர்கள் மீதாக கண்காணிப்புக்கள் தொடர்வது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமை காப்பு விடயங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான முன்னேற்றம் தொடர்பிலும் தமது பேரவை தொடர்ந்தும் கவனம் செலுத்தும். .” என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உதவி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.