வௌிநாடுகளில் இறந்தவர்களது சடலத்தை கொண்டு வருவதற்கு புதிய முறை அறிமுகம்..

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பிலான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு புதிய முறைமை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று(23) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் உறவினர்கள் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அல்லது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு தேவையான அடையாள ஆவணங்கள், சத்தியக் கடதாசிகள் மற்றும் ஏனைய ஆவணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதனை இயலுமாக்கும் புதிய முறைமையொன்றை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவானது உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரையிலும், மரணித்த நபரின் உறவினர்கள் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது வெளிநாட்டில் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதனை அங்கீகரிப்பதற்காக குறித்த ஆவணங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

புதிய முறைமையின் கீழ், மரணித்த நபரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடிவதுடன், அவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும்.