சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதியில் சீன விமானப்படை போர்ப்பயிற்சியை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென்சீனக்கடல் வழியாக உலகின் மூன்றில் இரு பங்கு கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. அது மட்டுமின்றி, இந்த கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது.
தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் சீனா, அங்கு சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென் சீனக்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதியில் சீன விமானப்படை போர்ப்பயிற்சியை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சீன விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில், எச்-6கே போர் விமானங்கள், சு-30, சு-35 ரக போர் விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த போர் பயிற்சி எப்போது நடைபெற்றது மற்றும் தென்சீனக்கடல் பகுதியில், மேற்கு பசிபிக் பகுதியில் குறிப்பாக எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் இது போருக்கான சிறந்த ஆயத்தம் என கூறி இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.