ரஷ்யாவின் உபா நகரில் இன்று நடைபெற உள்ள, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ள, பிரதமர் நரேந்திர மோடி, அதில் கலந்து கொள்ளும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேச உள்ளார் என, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற, பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, நவாஸ் ஷெரீப், டில்லி வந்திருந்தார்.
அதன் பிறகு, நவம்பரில், நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்ற, ‘சார்க்’ மாநாட்டில், இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். ஆனால், பேசவில்லை.கடந்த மாதம், ரமலான் நோன்பு துவங்கியதை அடுத்து, நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி, வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், இருவரும் இன்று காலை சந்தித்து பேச உள்ளதாக, இந்திய வௌயுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், நேற்று கூறினார்.ஆனால், அதற்கு முன்னதாகவே, நேற்று இருவரும் சந்தித்துக் கொண்டனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிக்ஸ் மற்றும் எஸ்.சி.ஓ., அமைப்புகளின் தலைவர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற மோடியும், நவாஸ் ஷெரீபும், சந்தித்தனர்.
ஈரான் நாட்டின் அதிபர் ஹாசன் ரவுஹானியையும், பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். எஸ்.சி.ஓ. எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்கு வந்திருந்த ஈரான் அதிபரை, பிரதமர் மோடி சந்தித்து, இருதரப்பு உறவு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.
பயங்கரவாதத்தை ஒன்றாக எதிர்க்க வேண்டும்: ‘பிரிக்ஸ்’ எனப்படும், பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், உபா நகரில் நேற்று நடைபெற்றது.அதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு, அமைதியும், ஸ்திரத்தன்மையும் மிகவும் அவசியம். பயங்கரவாதத்தின் சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இதில், நட்பு நாடுகளின் குழுக்கள் என்றோ, தங்களுக்கு வேண்டிய அமைப்புகள் என்றோ பரிவு காட்டக் கூடாது.
என, பிரதமர் மோடி பேசினார்.
இதன் மூலம், மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தான் பயங்கரவாத தலைவன் லக்விக்கு ஆதரவாக, ஐக்கிய நாடுகள் சபையில், சீனா எடுத்த முயற்சியை, பிரதமர் மோடி மறைமுகமாக சாடியதாக நம்பப்படுகிறது.
(riz)