பொடுகு நம்மை சங்கடப்படுத்துகிற விஷயம் மட்டுமல்ல. இதனால் சில சமயம் அதிகப்படியான எரிச்சலும் நமக்கு உண்டாகிறது. இது உச்சந்தலையில் நமைச்சலை உருவாக்கும். நம்ம வீட்ல இருக்கிற வெங்காயம் போதும். தலையில் இருக்கும் பொடுகை இலகுவில் போக்கிடும்.
வெங்காயம் சாறு:
ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதை தலைமுடியின் வேர்ப்பகுதிகள் முழுக்க தேய்க்கவும். 20 நிமிடங்கள் வரை உலரவிடுங்கள். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் 10 நிமிடங்களுக்கு மேல் இதை தலையில் வைத்திருக்க வேண்டாம்.
வெந்தயம் மற்றும் வெங்காயச்சாறு:
தேவையான பொருள்கள்-
2 தேக்கரண்டி வெந்தயம்
2 தேக்கரண்டி வெங்காயச்சாறு
செய்முறை: வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைத்து, காலையில் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச்சாறு கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடுங்கள். அதன்பின் தலைமுடியை நன்கு அலசுங்கள். பொடுகுத் தொல்லை நீங்குவதோடு உங்கள் கூந்தல் பளபளவென மின்னும். மேலும் இது தலைமுடியில் உண்டாகும் பூஞ்சைத்தொற்றையும் சரிசெய்யும்.
கற்றாழை மற்றும் வெங்காயச்சாறு:
தேவையான பொருள்கள்-
கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி
வெங்காயச்சாறு 3 தேக்கரண்டி
செய்முறை: வெங்காயச்சாறு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட்டாக்கி தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
பீட்ரூட் மற்றும் வெங்காயச்சாறு:
தேவையான பொருட்கள்-
2-3 பீட்ரூட்
1 தேக்கரண்டி வெங்காயச்சாறு
செய்முறை: பீட்ரூட்டை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வெங்காயச்சாறுடன் பீட்ரூட் பேஸ்டை கலக்கவும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் உச்சந்தலையில் இந்த கலவையை கொண்டு மசாஜ் செய்யவும். பொடுகு குறையும் வரை தினமும் இதை செய்யலாம். பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் முடி உதிர்வைத் தடுக்கிறது.
எலுமிச்சை சாறு – வெங்காயம் சாறு:
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1 தேக்கரண்டி வெங்காயம் சாறு
செய்முறை: எலுமிச்சை சாறுடன் வெங்காய சாற்றைக் கலந்து, உச்சந்தலையில் நன்றாக தடவவும். தடவிய பின்பு சுமார் 20 நிமிடங்கள் கழித்து அலசி விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். வெங்காயச் சாறின் நாற்றத்தை எலுமிச்சை சாறு நீக்கிவிடும்.
தேங்காய் எண்ணெய் – வெங்காயம் சாறு:
தேவைப்படும் பொருட்கள்
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
தேங்காய் எண்ணெய் 5 தேக்கரண்டி
வெங்காயம் சாறு 3 தேக்கரண்டி
செய்முறை: ஒரு மிஸ்சரில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி , 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து அதை கழுவவும். நல்ல முடிவுக்கு வாரம் இரண்டு முறை இதை செய்யுங்கள். இது வெள்ளை செதில்களை கட்டுப்படுத்துகிறது.