2018ம் ஆண்டு முதல் மாணவர்கள் பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றும் போது பரீட்சை எழுத முன்னர் வினாத்தாளை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்பட்டு, வாசிக்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன் பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பல புதிய யுக்திகளை மாற்றங்களை பரீட்சைகள் திணைக்களம் இவ்வாண்டிலிருந்து முன்னெடுக்கவுள்ளது. 2001ஆம் ஆண்டிற்குப் பின்னரான பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை உறுதிப்படுத்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டிலிருந்து தரம்12ற்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை இணைய வழியாக நடத்தப்படவுள்ளது. பகுதி 1 பல்தேர்வு வினாக்கள் பகுதி2 பிரயோகப் பயிற்சி என நடைபெறும்.
பொதுப் பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக மேலதிக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் நோக்குனர்களை மேற்பார்வை செய்வார்கள்.
மேலும், ஆகஸ்ட் புலமைப் பரீட்சை முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது. அதே போல க.பொத. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் முதல் வாரத்திலே ஆரம்பிப்பதுடன் அந்த மாதத்திலேயே மதிப்பீட்டையும் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இனிமேல் க.பொ.த. சா.த மற்றும் உயர்தர சான்றிதழ்களின் பிரதிகளைப் பெறவிரும்பினால் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும். அதற்கான கட்டணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்தி அதன் இலக்கத்தை ஒன்லைனில் அறிவித்தால் பிரதிகளை கையில் கிடைக்குமாறு அல்லது தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.