எதிர்வரும் 07ம் திகதி இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர் (IPL) ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை சிறை பிடிப்போம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கருத்துத் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தொடரில் சென்னை அணிக்கான போட்டி எதிர்வரும் 10-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் ஐபிஎல் போட்டி சென்னையில் நடந்தால், அது மக்களை திசை திருப்பிவிடும் என்பதால், சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறக் கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கருத்துத் தெரிவிக்கையில்;
“… சென்னையில் எதிர்வரும்10-ஆம் திகதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு மானக்கேடு என கருதுகிறோம்.
போட்டியை தமிழக அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களையும் சிறை பிடிப்போம் என எச்சரிக்கிறேன்…” என தெரிவித்துள்ளமையால் சென்னையில் சில போட்டிகள் நடைபெறுவது மிகவும் கஷ்டம் என கூறப்படுகிறது.
-Rishma