கரடித் தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த கரடி சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பிலும், இச்சம்பவம் தொடர்பிலான விசாரனைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் வன ஜீவராசிகள் அமைச்சுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம இன்று(07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
“.. இக் கரடித் தாக்குதலினால் குறித்த கரடியை சுட்டுக் கொல்வதற்கு இடமளியாது உரிய முறைப்படி அதனை கைப்பற்றியிருக்க வேண்டும் இவ் விடயம் தொடர்பிலான உரிய விசாரணைகளை நடாத்தி தனக்கு அறிக்கை ஒன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளதுடன் இதற்காக உரிய நடவடிக்கைகளையும் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பிப்பர்..” எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 97ம் கட்டை பகுதியில் நேற்று(06) 04 நபர்களை கரடி தாக்கியதில் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.