மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை – இராணுவத்தினர் 7 பேருக்கு 10 வருட சிறை…

மியன்மாரில் கடந்த வருடம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 வருட சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த வருடம் பொலிஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

இது தொடர்பாக இராணுவம் விசாரணை நடத்தியதில், 4 இராணுவ அதிகாரிகள் மற்றும் 3 வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்கள் அனைவரும் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.