பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மீண்டும் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் மீண்டும் இணைவது குறித்து எஸ்.பி. திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த போதிலும் அவர் சுய விருப்பத்தின் பேரில் வாக்களிக்கவில்லை எனவும், தன்னுடன் இணைந்து வாக்களித்த 15 பேரின் கோரிக்கை மற்றும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டதன் காரணமாகவே இறுதி நேரத்தில் வாக்களித்ததாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நடந்த பேச்சுவார்த்தைகளில், தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியினர் கடும் அழுத்தங்களை கொடுத்த போது, ஐக்கிய தேசியக்கட்சி அழுத்தங்களை கொடுத்தாலும் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தியதாக அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
$$