ஜனாதிபதி 8ம் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் உட்பட குழுவினர் இணைந்து நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கிய பின்னர் உத்தியோபூர்வமாக அறிவிப்பதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க உட்பட ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர், உறுப்பினர்கள் சிலர் குறித்த புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்; ஊழல், மோசடி குற்றம் சுமத்தப்பட்டவர்களுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தங்கள் குழு விரும்பவில்லை. மேலும் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாப்பதற்காக இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய கூட்டணியில் வேட்புமனு பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது.
புதிய சூழல் காரணமாக வேட்புமனு ஒப்படைத்தல் நடவடிக்கை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(riz)