நாட்டின் பல பாகங்களில் இன்றும்(23) மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேற்கு, வடமேற்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் தென்மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை(24) வரையான காலப்பகுதியில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5– 3.0m உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படும்.
கரையை அண்டிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் கடல் அலைகள் சிறியளவில் நிலப்பகுதிகளுக்கும் வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20–30Km வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.