கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்குமாயின் சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிரான அமைப்புடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சைட்டம் வைத்திய கல்லூரி மாணவர்களை, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக் கொள்ளுமாறு தாம் அரசாங்கத்தை கோரியதாகவும், எனினும் அரசாங்கத்தின் அணுகுமுறை பிரச்சினையை மேலும் பெரிதாக்குவதாக அமைந்துள்ளதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே நேற்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், குறித்த சட்டமூலமானது இலங்கை வைத்திய சங்கத்தின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், அரசாங்கத்தின் குறித்த முயற்சியானது வைத்திய விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழக சட்டத்திட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காடியிருந்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி தொடர்பிலான சட்டமூலமானது, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை பாதுகாக்கும் நோக்கில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தால், உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹரித அளுத்கே மேலும் தெரிவித்திருந்தார்.
####