ஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு – 9 ஆம் திகதி ஆரம்பம்…

கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தென்கொரியா பங்கேற்கும் உச்சி மாநாடு இம் மாதம் 9 ஆம் திகதி டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய கண்டத்தில் உள்ள ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்து கொள்ளவும், நட்புறவை பலப்படுத்தவும் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன.

முதல் மாநாட்டை 2008-ம் ஆண்டு ஜப்பான் நடத்தியது. அதன்பிறகு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் உச்சி மாநாடு டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த மாநாடு தற்போது நான்காவது முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 8 ஆம் திகதி ஜப்பானுக்கு செல்லும் சீன பிரதமர் லி கெகியாங் ஜப்பான் மன்னர், அதிபர், பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.