நாட்டின் தென்கிழக்கு பிரதேசத்தில் ஆழமான கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து காற்று வீசுவதுடன் மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை வேகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70-80கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.