பொதுபல சேனா தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காக பிரபல இணையத்தளம் முடக்கம்…

தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையரின் நியாயங்களை சிங்களத்தில் எழுதியும், சிங்களப் பேரினவாதிகளின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு சிங்களத்திலேயே பதிலடி கொடுக்கும் நோக்கிலும் கடந்த நான்கு வருடங்களாக சிங்கள மொழியை முதன்மைப்படுத்தி ‘கொழும்பு நியூஸ் டுடே’ செய்தி இணையத்தளம் நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த சிங்கள செய்தி இணையத்தளமே நேற்று(09) தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காக பல மணித்தியாலங்கள் வரை குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டிருந்ததாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை தோற்கடித்து நல்லாட்சியை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கில் முக்கிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் பலர் இணைந்து இந்த செய்தித் தளத்தை உருவாக்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கான பொதுமக்கள் அழுத்தம், வவுனியாவில் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக சிங்கள இனவாதிகள் கூக்குரலிட்ட சந்தர்ப்பத்தில் இரா. சம்பந்தன் தரப்பு நியாயங்களை சிங்களத்தில் முன்வைத்தமை, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கியமை மற்றும் அண்மையில் யாழ். ரயிலில் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பாக சிங்கள மொழியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டமை போன்ற செயற்பாடுகளை இந்த செய்தித்தளம் முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அண்மையில் விஜிதபுர பிரதேசத்துக்கான விஜயத்தின் ​போது பாதுகாப்புத் தரப்பினர் போன்று உடையணிந்த சிலரும் அவருடன் கூடச் சென்றிருந்தமை குறித்து colombonewstoday.lk இணையத்தளம் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் பொதுபல சேனா அமைப்பானது செய்தியை வெளியிட்ட இணையத்தள நிர்வாகத்துக்கு எதுவித தெளிவுபடுத்தல்களோ, குறித்த செய்தியை திருத்தி வெளியிடுமாறு வேண்டுகோள் விடுக்காமலும் நேரடியாக பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளது.

இதனையடுத்து நேற்று காலை தொடக்கம் colombonewstoday.lk இணையத்தளம் பல மணிநேரங்கள் வரை முடக்கப்பட்டிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு எதுவித விளக்கங்களும் அனுப்பாத நிலையில் அவர்களின் முறைப்பாட்டுக்காக மட்டும் இணையத்தளம் முடக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்துக்கான பாரிய அச்சுறுத்தலாகும்.

அதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் இணையத்தள பதிவு நிறுவனமான Nic.lk மற்றும் பாதுகாப்பு அமைச்சு, பொதுபல ​சேனா போன்றவற்றுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சட்டரீதியான அணுகுமுறைகளின் பின்னர் குறித்த இணையத்தளம் மீண்டும் செயற்படும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இணையத்தள பிரதம ஆசிரியரின் தனிப்பட்ட முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கங்கள் என்பன இணையத்தள பதிவு நிறுவனத்தின் மூலம் வற்புறுத்தல் ஊடாக பொதுபல சேனா அமைப்புக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது எமது இணையத்தள பிரதம ஆசிரியரின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.