ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்பு கோரியதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரவில்லை என்றும் அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதியுடன் சமகால அரசியல் நிலவரம் குறித்தே கலந்துரையாடியதாக குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரியதாக தெரிவித்திருந்தார்.
தவறான நபருக்கு நாட்டின் தலைமையினை வழங்கியதால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினைப் போன்றே நாடும் இவ்வாறான நிலைக்கு ஆளாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் அமைச்சர் பொன்சேகா தெரிவித்திருந்ததோடு, பின்னர் பங்கேற்ற பிரிதொரு ஊடக சந்திப்பின் போது, தனக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை வழங்க ஜனாதிபதி எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததாகவும் அமைச்சர் பொன்சேகா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.