தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா…

அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய இராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா இரத்து செய்துள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.