ஈராக் நாட்டின் தலைநகரான பக்தாத்தில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு 34 பேர் பலியாகினர்.
கதிமியா பகுதியில் அடான் சதுக்கத்தின் அருகேயுள்ள சோதனைச் சாவடியை குறிவைத்து நேற்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் மூன்று காவலர்கள் மற்றும் பொதுமக்களில் ஐவர் பலியாகினர்.
இரண்டாவதாக, அல் அஸ்கான் மாவட்டத்தில் நோன்பு திறப்பதற்காக மக்கள் கூடியிருந்த பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஷபாப் பகுதியில் கார் குண்டு வெடித்ததில் பத்து பேர் பலியாகினர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, அதே இடத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பனூக் மாவட்டத்தில் சாலையோர குண்டு வெடிப்பில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த ஐந்து தாக்குதல்களிலும் மொத்தம் 34 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஆஸ்பத்திரிகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(riz)