சிங்கப்பூர் – கோலாலம்பூர் புல்லட் ரயில் திட்டம் இரத்து…

கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோ மீட்டர் தூர புல்லட் ரயில் திட்டத்தை இரத்து செய்வதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மலேசியா பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மஹாதிர் முஹம்மது தற்போது மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சுமார் 2500 கோடி அமெரிக்க டாலர் அளவிலான கடன் சுமையில் மலேசிய அரசு சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை இரத்து செய்யப் போவதாகவும் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரயில் திட்டத்தை இரத்து செய்வதாக மஹாதிர் முஹம்மது அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சாலை வழியாக சிங்கப்பூர் சென்றடையும் பயணநேரம் 5 மணி நேரமாக உள்ளது. விமானம் மூலம் ஒருமணி நேரத்தில் சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு நஜீப் ரசாக் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூர் – கோலாலம்பூர் இடையே புல்லட் ரயில் சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. இந்த புல்லட் ரயில் மூலம் சிங்கப்பூர் – கோலாலம்பூர் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் சென்றடையலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வரும் 2026-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் 1400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பரிசீலனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரயில் திட்டத்தை இரத்து செய்வதாகவும், இது இறுதி முடிவு என்றும் மஹாதிர் முஹம்மது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.