‘சீறும் புலிகள்’ எனும் தலைப்பில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது…

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ‘சீறும் புலிகள்’எனும் தலைப்பில் படமாக்கப்படவுள்ளது.

‘லைட் மேன்’, ‘உனக்குள் நான்’, ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கடேஷ் குமார். இவர் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இருக்கிறார். ஸ்டுடியோ 18 நிறுவனம் சார்பில் அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார்.

பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர்.

இந்தப் படத்துக்காகப் பிரபாகரன் முகச்சாயல் கொண்ட நடிகரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘சீறும் புலிகள்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். ‘விடுதலைப் புலிகள்’ என்பதை மையப்படுத்தி இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.