எதிர்வரும் 3 மாதத்தில் சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகளுக்கு வேறு இடமொன்று வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று(19) தெரிவித்துள்ளார்.
ரக்குவானை ரஜவத்த கிராம மக்களை சந்தித்து நேற்று அமைச்சர் சரத் பொன்சேகா இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். இதன்போது அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்;
“கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி என்னுடன் கதைத்திருந்தார்.
சிங்கராஜா வனத்திலுள்ள யானைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன என கேட்டார். அப்பொழுது நிலைமையை முழுமையாக விளக்கினேன்.
இதனையடுத்து, யானைகளை மாற்றுவதற்கான வேறு இடமொன்றை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் தெரிவித்தார். ஜனாதிபதி கூறியபடி வேறு இடமொன்று தரப்படாவிட்டால் நான் அமைச்சுப் பதவியில் இருக்க மாட்டேன்.
பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவும் தனது பதவியை துறப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார்..” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.