பணிப்புறக்கணிப்பில் உள்ள அஞ்சல் ஊழியர்கள் தாம் பணியாற்றும் அலுவலகத்திற்கு சேவைக்காக பிரசன்னமாக முடியாது போனால், பணியாளர்கள் அருகில் உள்ள அஞ்சல் அதிகாரி அலுவலகத்திற்கு சேவையின் பொருட்டு வருகை தருமாறு அஞ்சல் மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கோரியுள்ளார்.
இவ்வாறு பிரசன்னமாகும் சேவையாளர்களுக்கு தேவையான வாகன போக்குவரத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு திரும்பும் சேவையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அஞ்சல் தொழிற்சங்கத்தினருக்கும், சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நேற்று(25) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி முடிடைந்துள்ள நிலையில், தமது போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெறும் என ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அஞ்சல் சேவை தொடர்பில் விசேட வேதனம் தயாரிக்கப்பட்டு வேதன நிர்ணய சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.
அதனை அனுமதிப்பதாக வேதன நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அதற்கு வாய்மூல இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ள, நிலையில் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதாகவே தமக்கு புலப்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.