ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் பணியாற்றும் மேலதிக ஊழியர்களை, சுய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி நீக்கம் செய்வது தொடர்பில், அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறித்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய விமான சேவைகளின் நிதி நிலைமைகள் தொடர்பில் ஆராயும் குழு முன்வைத்த பரிந்துரைத் தொடர்பில் ஆராய்வதற்காக, விமான நிறுவனம் விசேட பணிக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் 2,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதோடு, சுமார் 1,000 ஊழியர்கள் 50 – 55 வயதுக்குட்பட்டவர்களாக காணப்படுவதாக விமான நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
மேலும், ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், நான்கு புதிய 350 NEO-300 ரக விமானங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு ஏற்கனவே அனுப்பப்பட்ட கொள்வனவு உத்தரவுகளை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலாக எட்டு NEO-320 விமானங்களை வழங்க குறித்த விமான உற்பத்தி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் குறித்த விமானங்கள் 2023ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த நிதியாண்டில் 15% செலவீனங்களை குறைப்பதற்கும் தேசிய விமான சேவைகளின் நிதி நிலைமைகள் குழு மேலும் பரிந்துரைத்துள்ளது.