ஐபிஎல் சூதாட்டம் – சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கான தண்டனை இன்று அறிவிப்பு

2013–ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட்பிக்சிங்’ எனும் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்களுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது.

ஐ.பி.எல் அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததால் சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் கமிட்டி தலைமையிலான குழு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது. இந்த குழு தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருவரையும் குற்றவாளி என்று அந்த குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். அணிகளின் நிர்வாகிகள் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மற்றும் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி ஆராய சுப்ரீம் கோர்ட்டு 3 பேர் கொண்ட குழுவை கடந்த ஜனவரி மாதம் நியமித்தது.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அசோக்பான், ஆர்.வி.ரவிந்திரன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழு கடந்த 6 மாதங்களாக இதுபற்றி ஆய்வு செய்தது. மேலும் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்வது பற்றியும் ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில் லோதா கமிட்டி தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது. சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியவரும்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தலைவிதியும் இன்று தெரியும். இந்த இரு அணிகளுக்கும் தடை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய தொகையில் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தடையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் லோதா கமிட்டி அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

(riz)