ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர்கொண்ட அணி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸவை சந்தித்துப் பேச்சு நடத்தியமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில்;
“..டிலான் பெரேரா போன்றவர்களுக்கு நிலையானதொரு கொள்கையில்லை. அதனால் தான் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர்.
சிறிய கட்சிகளை சந்திக்க மாட்டோம் என்று கூறியவர்கள் சொன்னதை மறந்து தற்போது அதைச் செய்கின்றனர். சு.கவின் 16 பேர் கொண்ட அணியானது மரம் விட்டு மரம் தாவும் குரங்கென விமர்சித்தவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியுடன் பேசலாமா?
சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிவகிக்கும் நிலையில், மேற்படி உறுப்பினர்கள் வேறொரு நபரின் பெயரை உச்சரிக்கின்றனர். இருந்தும், இவர்களை ஏற்கப்போவதில்லையென அந்தக் குழு (மஹிந்த அணியான பொது எதிரணி) குறிப்பிடுகின்றது.
மஹிந்த அணிக்கும் கொள்கை, உறுதியான நிலைப்பாடு இருக்கின்றது. ஆனால், டிலான் பெரேரா போன்றவர்களிடம் நிலையான கொள்கை, நிலைப்பாடு இல்லை. அதனால்தான் வெவ்வேறான கருத்துகளைக் கூறிவருகின்றனர்”