அரச வங்கிக் கொள்ளை சம்பவம் – விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைப்பு…

அனுராதபுரம் – தலாவ நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 95 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வங்கியின் பின்புற நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் மூன்று பெட்டகங்களை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வங்கிக் கிளையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு சமிக்ஞை மற்றும் கண்காணிப்பு கமராக்களையும் கொள்ளையர்கள் கொண்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கிக் கட்டடத்திற்கு பின்புறமாகவுள்ள தனியார் காணி மற்றும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகின்ற வீதிகளில் மோப்ப நாய்களை ஈடுபடுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.