முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு இடையிலான நேற்றைய(02) சந்திப்பில் அண்மையில் அரசிலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவில் 14 பேரே கலந்து கொண்டுள்ளதோடு, இருவர் அதனை புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திசாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதில் எஸ்.பீ திசாநாயக்க அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தயாசிறி ஜயசேகர ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சந்திப்பினை புறக்கணித்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரது வெவ்வேறான சந்திப்புக்கள் ஒரே நாளில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.