800 கோடிக்கு ரியல் மாட்ரிட் அணி ரொனால்டோ’வை விற்கத் தயார்…

ஆஜன்டீனா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் சம்பளத்தை விட அதிகமாக வேண்டும் என அடம் பிடித்த ரொனால்டோவை ரியல் மாட்ரிக் அணி 800 கோடிக்கு விற்க தயாராகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2003-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.

அதன்பின் 2009-ல் இருந்து தற்போது வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் தொடரை கைப்பற்றியுள்ளது.

ரியல் மாட்ரிட் அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் 2021-ஆம் ஆண்டு வரை இருக்கிறது. இருப்பினும் மெஸ்சியின் சம்பளத்தை விட தன்னுடைய சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால் சம்பளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று ரியல் மாட்ரிட் அணியிடம் ரொனால்டோ வலியுறுத்தி வந்தார்.

இதனால் ஆண்டு தோறும் 65 மில்லியன் பவுண்டு சம்பளம் தரவேண்டும் என்று கேட்டார். ஆனால், ரியல் மாட்ரிட் 30 மில்லியன் பவுண்டு மட்டுமே வழங்க முடியும் என்று கூறியதால் ரொனால்டோ அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்தாலி கிளப்பான யுவான்டஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்க இருப்பதாகவும், ரொனால்டோவுடன் பேசியதாகவும் இதற்கிடையே 100 மில்லியன் யூரோவிற்கு (சுமார் 800 கோடி ரூபாய்) யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.