வன்னியாகுளம் கொலை சம்பவம் – இரு தரப்பினரும் நிரபராதிகள் இல்லை..

இனம்தெரியாத குழு ஒன்றினால் கொலை செய்யப்பட்ட அநுராதபுரம், வன்னியாகுளம் பகுதியை சேர்ந்த சுஜீவ பிரசன்ன குமார என்பவரின் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

இன்று (08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் மற்றும் உயிரிழந்த நபருக்கு இடையில் பல காலமாக பிரச்சினைகள் இருந்து வருவதுடன் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் குறித்த இருவருக்கும் இடையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபரினால் கொலை செய்யப்பட்ட நபருக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவியினால் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புல்லையார் சமிந்த எனும் நபர் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை உயிரிழந்த நபருக்கு எதிராக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஒன்று பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததும் மற்றும் ஏனைய நான்கும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதும் ஆகும்.

தாக்குதல் சம்பவங்களில் ஒன்று, கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புல்லையார் சமிந்த எனும் நபரின் கையை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதே ஆகும்.

இதில் ஒரு தரப்பினரை மாத்திரம் நிரபராதிகள் என கூற முடியாது எனவும் இரு தரப்பினர்களுக்கு எதிராகவும் வழக்குகள் இருப்பதாவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.