காற்றின் வேகம் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும்…

நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் மத்திய , மேல் மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ அளவான மழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.