ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்புக்குள் பிரவேசிக்கும் சகல வீதிகளையும் மறித்து பாரிய ஆர்ப்பாட்டம்…

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்புக்குள் பிரவேசிக்கும் சகல வீதிகளையும் மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“..ஆகஸ்ட் 17 என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு நிறைவடையும் நாள். அன்றைய தினம் நாங்கள் கொழும்புக்கு வந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்த தயாராகி வருகிறோம்.

நாட்டு மக்களின் அனைத்து நிவாரணங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பாரதூரமான அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

நாட்டின் அரச தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இது குறித்து உரிய கவனத்தை செலுத்துவதில்லை. நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற நிலைமைக்குள் சென்றுள்ளது. நாடு சீர்கெட்டு போயுள்ளது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்துள்ளது. அரசாங்கம் வழங்கிய ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் மக்களின் வயிற்றில் அடித்து மக்களை பழிவாங்கி வருகிறது.

நாட்டின் அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட சகல மக்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்..” என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

 

R.Rishma