படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…

அமெரிக்காவில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன், இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே உள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் நேற்று படகு சவாரி செய்தனர். 29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது.

இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தீவிர தேடுதலுக்குப் பிறகு மீதமுள்ள 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டதுடன், படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.