லாவோஸின் அட்டபியூ மாகாணத்தில் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் தென்கொரிய நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 5 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர் அணையில் இருந்து வெளியேறியது.
இதனால் அணைக்கு அண்மையில் அமைந்திருந்த குடியிருப்புப் பகுதிக்குள் நீர் புகுந்து வீடுகள் பல நீரில் அடித்துச் செல்லப் பட்டன. வெள்ளத்தின் வேகமும் அதிகமாக இருந்ததால் சுமார் 6600 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
மேலும், இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காணாமற் போயுள்ளனர். மேலும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கும் என அஞ்சப் படுகின்றது.
அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் தங்கள் பொருள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள், உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்கி உதவிடுமாறு அரசு துறைகள் மற்றும் இதர தரப்பினருக்கு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், போர்க்கால அடைப்படையில் பணியாற்றும் மீட்பு குழுவினருடன் சேர்ந்து சில உள்ளூர் தன்னார்வ அமைப்புகளும் தங்களை மீட்பு பணியில் இணைத்து கொண்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு இந்த அணை கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் கிட்டத்தட்ட 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த வருடம் இந்த அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.