நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல தடவைகளும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்; சிறியளவிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் நாளை வரையான காலப்பகுதியில், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளின் தாழ்வுப் பகுதிகளில் 3.0-3.5மீ உயரம் வரை மேலெழும் அலைகள் காரணமாக அலைகளின் தாக்கம் அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து நீர்கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அவ்வேளைகளில் அக்கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இதன்போது அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.