பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று(25) ஆரம்பமாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது.
இதனால் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 25 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு பணியில் 4 லட்சம் பொலிசாரும் 3,71,000 இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.
வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளதுடன், வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.