பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கானின் தெஹ்ரீக் ஏ இன்சாப் கட்சி (Tehreek-e-Insaf) அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும், முடிவை அறிவிப்பதில் தாமதம் நிலவுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்ட சபைகளுக்கும் சேர்த்து நேற்று(25) தேர்தல் நடைபெற்றது.
272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நவாஸ் ஷரீப் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ள போதிலும், இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை. இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
1996ல் கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போது கிடைத்துள்ள வெற்றியை அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.