பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் ஓரளவுக்கு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் கரையோர பிரதேசம் தொடர்பாக திணைக்களம் குறிப்பிடுகையில் கிழக்கு கடற்பரப்பில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து நீர்கொழும்புஇ காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்..

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.