வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுதலை…

கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்திய போது பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த இடத்தில் மாகாண சபை உறுப்பினரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து நேற்று(10) மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுறுக்குவலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2 ஆம் திகதி மாவட்ட கடற்றொழில் திணைக்கள வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.